தஞ்சாவூர் அருகே விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பலி 

விபத்து;

Update: 2025-07-08 16:27 GMT
தஞ்சை அருகே கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் தவறான திசையில் வந்த சரக்கு வேன் நேருக்கு நேர் மோதியதில் காரில் வந்த சிறுமி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த  4 பேர் பலியான சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பெருங்களத்தூர் விஷ்ணு நகர் பகுதியை சேர்ந்த செல்லமுத்து என்பவரின் மகன் குமார் (57). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் தனது மனைவி ஜெயா (55), மகள்கள் துர்கா (32), மோனிஷா (30) மற்றும் மருமகன் ஸ்டாலின் (36), பேத்தி இதழனி தூரிகா  (3) ஆகியோருடன் ஆன்மீக சுற்றுலாவாக காரில் புறப்பட்டார்.   மருமகன் ஸ்டாலின் போரூரில் உள்ள ஒரு ஐடி கம்பெனியில் பணியாற்றி வருகிறார். செவ்வாய்க்கிழமை காலை கும்பகோணம் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்து விட்டு தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு புறப்பட்டனர். கும்பகோணம் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டு இருந்தது. காரை ஸ்டாலின் ஓட்டி வந்தார். இந்நிலையில், தஞ்சை அருகே உதாரமங்கலம் பகுதியில் நாற்றுக்களை ஏற்றிக் கொண்டு வயலில் இருந்து சரக்கு வேனை விக்னேஷ் என்பவர் ஓட்டி வந்தார். சரக்கு வேன் தவறான திசையில் வந்துள்ளது. அப்போது எதிரே ஸ்டாலின் ஓட்டி வந்த கார் மீது  சரக்கு வேன் வேகமாக நேருக்கு நேர் மோதியது. இதனால் காரில் வந்தவர்கள் அலறியுள்ளனர். விபத்து நடந்ததை பார்த்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். தொடர்ந்து காரில் இருந்தவர்களை மீட்டு காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்த தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் ஜெயா சம்பவ இடத்திலேயே பலியானார். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சிறுமி இதழனி தூரிகா, குமார், ஸ்டாலின் மனைவி துர்கா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மோனிஷா, ஸ்டாலின் மற்றும் சரக்கு வேன் டிரைவர் உதாரமங்கலத்தை சேர்ந்த விக்னேஷ் (35) மற்றும் வேனில் வந்த கொடிக்காலுரை சேர்ந்த இளங்கோ (51) ஆகியோர் காயம் அடைந்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து ஸ்டாலின் தஞ்சை தாலுகா காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் உதவி ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News