தார் சாலையை அமைக்க விடாமல் இடையூறு
திண்டுக்கல் அருகே பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்படும் புதிய தார் சாலையை அமைக்க விடாமல் தனிநபர் இடையூறு செய்வதால் விவசாயிகள் அவதி;
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுரைக்காய் பட்டியில் இருந்து கோம்பை பகுதியில் உள்ள செல்லாண்டியம்மன் கோவில் வரை சாலை அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்தப் பகுதியில் புதியதாக தோட்டம் வாங்கிய தனிநபர் தனது தோட்டத்தின் வழியாக சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கோம்பை பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் வசித்து வரும் நிலையில் தென்னை மற்றும் வாழையை பிரதான தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவர்கள் விளைவிக்க கூடிய விவசாய பொருட்களை டிராக்டர் மற்றும் வேன்கள் மூலமே கொண்டு சந்தைப்படுத்தி வரும் நிலையில் சுமார் பல வருடங்களாக இந்த சாலையை பொதுமக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இதனிடையே தற்பொழுது புதிதாக தார் சாலை அமைக்க பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தனி நபர் ஒருவர் சாலை அமைக்க கூடாது எனக் கூறி பிரச்சனை செய்வதாகவும் எனவே தங்களுடைய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் ஐ பெரியசாமி உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு பாதை வசதி செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.