செல்போன் உரையாடலை பதிவு செய்து கொலை மிரட்டல் - பாதிக்கப்பட்டவர் கோவை காவல் ஆணையரிடம் புகார் !

செல்போன் உரையாடலை பதிவு செய்து கொலை மிரட்டல் விடுவதாக சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் காவல் ஆணையரிடம் புகார்.;

Update: 2025-07-13 05:27 GMT
கோவை, சிங்காநல்லூரைச் சேர்ந்த ஜோஸ்வா எடிசன், வீட்டிலேயே ஆறாத புண்களுக்கான சிகிச்சை வழங்கும் ஹோம் கேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம், துடியலூரைச் சேர்ந்த பிரபு டானியல் என்பவர், தனிப்பட்ட குடும்ப பிரச்சனை தொடர்பாக பேச வேண்டுமென ஜோஸ்வாவை அணுகியதாக கூறப்படுகிறது. அப்போது, வழக்கறிஞர் சாண்டி வில்லியம் தனது குடும்ப விவகாரங்களில் தலையிடுவதாகவும், தொழிலில் தடைகள் ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டி, ஏதாவது செய்ய வேண்டும் என கூறியதாக ஜோஸ்வா தெரிவித்தார். அதற்கு பதிலாக, இதை சட்டபூர்வமாகவே அணுகலாம் என பதில் அளித்ததாகவும் கூறினார். அன்றிரவு பிரபு டானியலுடன் தொலைபேசியில் பேசியபோது, வழக்கறிஞர் சாண்டி வில்லியம்சை எதிர்த்து சில ஆவேசமான வார்த்தைகள் பேசியதாக ஜோஸ்வா கூறியிருக்கிறார். இந்த உரையாடல் செல்போனில் பதிவு செய்யப்பட்டு, பின்னர் துடியலூர், காவல் நிலையத்தில் புகாராக கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதை வுடுத்து, துடியலூர் போலீசார் ஜோஸ்வாவை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணை அதிகாரி முன்னிலையில் தனது தவறை ஒப்புக்கொண்டு, சாண்டி வில்லியம்சிடம் மன்னிப்பும் கேட்டதாக அவர் தெரிவித்தார். இருந்தும், ஏழு நாட்கள் காவலில் வைத்து இருந்த பின் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார். பிணை நிபந்தனைகளின்படி யாரிடமும் தொடர்பு கொள்ளக் கூடாதென இருந்த நிலையில், அவர்களே தொடர்ந்து தொடர்பு கொள்ள முயற்சித்ததாக ஜோஸ்வா கூறி உள்ளார். கடந்த 30 ஆம் தேதி, தனது உறவினரான ஆனந்தை தொடர்புகொண்டு, தகாத வார்த்தைகளில் பேசி, தன்னை, தனது பெற்றோர்கள் மற்றும் ஜாதியை இழிவுபடுத்தி பேசியதாகவும், தாங்க முடியாத அளவுக்குக் கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டதாகவும் புகார் அளித்து உள்ளார். மேலும், இவர்கள் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த பலரிடம் மிரட்டல் மற்றும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தகவல்கள் உள்ளன. எனவே, இதுபோன்ற செயல்களை தடுக்கும் வகையில் தக்க நடவடிக்கை எடுக்க கோவை காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்து உள்ளதாக ஜோஸ்வா தெரிவித்தார்.

Similar News