உங்களுடன் ஸ்டாலின்" திட்டம் குறித்த விண்ணப்பப் படிவம் வழங்கப்படுவதை ஆய்வு செய்த ஆட்சியர் 

ஆட்சித்தலைவர் ஆய்வு;

Update: 2025-07-13 13:28 GMT
தமிழ்நாடு முதலமைச்சர், 15.07.2025 அன்று தொடங்கவுள்ள "உங்களுடன் ஸ்டாலின்" என்னும் திட்டம் குறித்த விண்ணப்பப் படிவம் மற்றும் விழிப்பிணர்வு கையேடுகளை, தஞ்சாவூர் மாநகராட்சி கரந்தை செல்லியம்மன் கோவில் தெரு பகுதியில், பொதுமக்களுக்கு வழங்கும் பணி நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம்  சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டில் உள்ள ஏழை மற்றும் எளிய மக்களுக்கு அரசின் மூலமாக வழங்கப்படும் நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில், “உங்களுடன் ஸ்டாலின்” எனும் சிறப்பு திட்டத்தின் கீழ், மக்களிடமிருந்து மனுக்களை பெறும் முகாம்கள் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் மொத்தம் 353 சிறப்பு முகாம்கள், 15.07.2025 அன்று தொடங்கி பல்வேறு கட்டங்களாக 30.09.2025 வரை நடைபெற உள்ளன. இந்த முகாம்களின் மூலமாக மக்களுக்கு வழங்கப்படும் அரசுத் துறைகளின் நலத்திட்டங்கள், முகாம்கள் நடைபெறும் இடங்கள் உள்ளிட்ட விவரங்களை மக்களுக்கு தெளிவாக எடுத்துச் செல்லும் வகையில், தஞ்சாவூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று விண்ணப்பப் படிவம் மற்றும் விழிப்புணர்வு கையேடுகள் வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எந்தெந்த துறைகளின் சார்பில் என்னென்ன நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன, அவற்றைப் பெற பொதுமக்கள் எவ்வாறு மனு அளிக்க வேண்டும், முகாம் நடைபெறும் இடம் எங்கே, அந்த முகாம்களில் எவர் பங்கேற்கலாம் என்பதனை விளக்கும் விரிவான தகவல்களுடன் கூடிய விழிப்புணர்வு கையேடுகள் மற்றும் விண்ணப்ப படிவம் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் தன்னார்வலர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் ஆகியோரால் வீடு வீடாக நேரடியாக வழங்கப்பட்டு வருகின்றன.              நகர்ப்புறப் பகுதிகளில் 13 துறைகள் சார்ந்த 43 நலத்திட்டங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில்   15 துறைகள் சார்ந்த 46 நலத்திட்டங்கள் வழங்கப்பட உள்ளன. இத்திட்டத்தின் அடிப்படையில், தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் தன்னார்வலர்கள் வீடுகளைத் தேடி தனித்தனியாகச் சென்று விண்ணப்பப் படிவம் மற்றும் விழிப்புணர்வு கையேடுகளை வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.  இதனை நேரில் ஆய்வு செய்யும் வகையில், மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் கரந்தை பகுதியில் நடைபெற்ற விழிப்புணர்வு பணிகளை பார்வையிட்டு, தன்னார்வலர்கள் வழங்கும் தகவல்களைப் பற்றியும், பொதுமக்களின் கருத்துகளையும் கேட்டறிந்தார். மேலும், “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் தவறாமல் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் மற்றும் மனுக்களை அளித்து அரசின் நலத்திட்டங்களிலிருந்து பயனடைய வேண்டும்" எனத் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது வட்டாட்சியர் சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News