பல்லடம் அருகே குட்டையில் கொட்டப்படும் குப்பை கழிவுகள்
பல்லடம் பச்சாபாளையம் பகுதியில் குட்டையில் கொட்டப்படும் குப்பை கழிவுகள்;
பல்லடம் பச்சாபாளையம் பகுதியில் தண்ணீர் தேக்கி வைக்கும் குட்டை உள்ளது. இந்த குட்டைக்கு மழைக்காலத்தில் கோவை-திருச்சி மெயின் ரோட்டில் உள்ள நீரோடை வழியாக மழைநீர் வந்து சேரும். குட்டையில் தேங்கும் மழை நீரால், நிலத்தடி நீர் மட்டம் உயர்வது டன், கால்நடைகளின் மேய்ச்சல் பயன்பாட்டுக்கும் உதவியாக இருந்தது. குடிநீர், பாசன ஆதாரமாக திகழ்ந்தது. இந்தநிலையில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு, நீரோடையில் நகராட்சி கழிவுநீரை விட்டனர். காலப்போக்கில் கழிவு நீர் ஓடையாக மாறி, தற்போது குட்டையில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. அந்த குட்டை அருகே, கட்டிடக் கழிவுகளைக் கொண்டு வந்து இரவு நேரங்களில் கொட்டி செல்வதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். குப்பைகளையும் சிலர் கொட்டி செல்கின்றனர். இதனால் நீராதாரம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. எனவே குட்டையை காப்பாற்ற குப்பைகளை கொட்டுவதற்கு 'குட்பை' சொல்ல வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.