பல்லடத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
பல்லடம் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது;
பல்லடம் நகராட்சி 12- வது வார்டில் அண்ணா நகர் உள்ளது. இங்கு குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினிேயாகம் செய்யப்படுவதாக தெரிகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். சீராக குடிநீர் வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். ஆனால் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு நேற்று வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையிலான போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் அங்கு விரைந்தனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதிக்கு போதுமான அளவு குடிநீர் வழங்கப்படுவதில்லை. ஏற்கனவே பற்றாக்குறை உள்ள நிலையில், குறைந்த அளவே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. எனவே சீரான குடி நீர் வினியோகம் செய்ய வேண்டும் என்றனர். அதற்கு அதிகாரிகள், சீரான இடைவெளியில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பொதுமக்களின் சாலை மறியல் போராட்டம் காரணமாக சுமார் 20 நிமிடங்கள், கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.