குமரி மாவட்டம் மண்டைக்காடு புதூர் 16வது அன்பியத்தை சேர்ந்தவர் ஜேசுமாரியான் (50). மீனவர். வழக்கம்போல் நேற்று முன்தினம் கட்டுமரத்தில் மீன்பிடிக்க சென்றார். நீண்ட நேரம் வலையில் மீன்கள் சிக்கவில்லை. அவர் வலையை சுருட்டிய போது கனமான ஏதோ ஒரு பொருள் வலையில் இருந்தது. உடனே அவர் கரையில் வலையை பிரித்து பார்த்த போது முக்கால் அடி உயரமுள்ள அம்மன் சிலை சிக்கி இருந்தது. சிலையில் பீடம்பித்தளையிலும், சிலை செம்பினாலும், அம்மன் ஆறு கைகளுடன் சிங்கத்தின் மேல் அமர்ந்திருப்பது போல் இருந்தது. சிலையை மீட்டு கொண்டு சென்றவர் மனைவி மூலம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு கொடுத்து அனுப்பினார். உடனே கோயில் மேலாளர் செந்தில்குமார் மண்டைக்காடு கிராம அலுவலருக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். குளச்சல் வருவாய் ஆய்வாளர் ஸ்ரீஜித் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் சிலை கல்குளம் தாசில்தார் அலுவலகத்தில் வைக்கப்பட்டது.