விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.;
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இன்றையக் கூட்டத்தில், கோட்டூர், நரியூத்து, பச்சைமலையான்கோட்டை, ஜம்புதுரைகோட்டை, பாளையங்கோட்டை ஆகிய கிராமங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்திட வேண்டும், வேடசந்துார் வட்டம், விராலிப்பட்டி கிராமத்தில் உள்ள பெரியகுளத்தில் வண்டல் மண் எடுக்க அனுமதியளிக்க வேண்டும், விலங்குகள் மற்றும் பறவைகளால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக விவசாயிகள் 113 மனுக்கள் அளித்தனர். மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் கோரிக்கை மனுக்களை பெற்று, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். திண்டுக்கல் மாவட்டத்தில், தோட்டக்கலைத்துறையின் மூலம் ஆடிப்பட்ட காய்கறி விதைத் தொகுப்புகள் வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தொடங்கிவைத்தார். இன்றையக் கூட்டத்தில், வேளாண்மைத்துறை சார்பில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் விவசாயிகளுக்கு பசுந்தாள் உரப்பயிர் விதை (தக்கைப்பூண்டு) 50 சதவீதம் மானியத்திலும், ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்டத்தில் விவசாயிகள் வீட்டு காய்கறி தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தட்டைப்பயறு, அவரை, துவரை விதைகள் அடங்கிய தொகுப்பு 200 விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, இணை இயக்குநர்(வேளாண்மைத்துறை) பாண்டியன், இணை இயக்குநர்(கால்நடை பராமரிப்புத்துறை) பாபு, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் காயத்ரி, செயற்பொறியாளர் (நங்காஞ்சியாறு) பாலமுருகன், வேளாண்மை துணை இயக்குநர் காளிமுத்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) நாகேந்திரன் உட்பட துறை அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலகம் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்