ஒத்தக்கடை அருகே மரக்கன்றுகள் நடும் விழா
மதுரை யானைமலை அருகே அப்துல்கலாம் நினைவு நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது;
மதுரை அருகே அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக 225 ஆவது வார மரக்கன்றுகள் நடும் விழா ஒத்தக்கடை ஸ்ரீ கிருஷ்ணா அவென்யூ அரசு பூங்காவில் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. யானைமலை கிரீன் பவுண்டேஷன் ஆலோசகர் பாண்டி முன்னிலை வகித்தார். ஆலோசகர் பிரபு வரவேற்றார். உறுப்பினர் பாலமுருகன் தொகுத்து வழங்கினார். தலைமை ஆசிரியர் தென்னவன் அவர்கள் அப்துல் கலாம் அவர்கள் அரசு பள்ளியில் பயின்று இந்தியாவில் உயர்ந்த பதவியான குடியரசுத் தலைவராக உயர்ந்தவர் என்றும் அவர் பசுமைக்காக பல பணிகள் செய்தவர்; ஒரு கோடி மரங்கள் நடவு செய்தலை இலக்காகக் கொண்டவர். ஏவுகணை நாயகன் என புகழப் பெற்றவர். குழந்தைகளின் அன்பில் திளைத்தவர். குழந்தைகளை நேசித்தவர் என புகழாரம் சூட்டி கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைத்தார் அவரது அக்னி சிறகுகள் சுய சரிதை குறித்து விரிவாக பேசினார். அன்னாரது பொன்மொழிகள் குறித்தும் பேசினார். கலாம் அவர்கள் இளைஞர்களின் வழிகாட்டி' எனவும் உரை நிகழ்த்தினார். பூங்காவில் உள்ள மரக்கன்றுகளுக்கு கவாத்து பணி, பராமரிப்பு பணி, களப்பணி முதலியன நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு தேவையான நிலவேம்பு, கடம்பம், புங்கை, நீர் மருது மரம், மகிழம், செண்பகம் மரக்கன்றுகளை ஆடிட்டர் சுரேஷ் வழங்கினார். அரிட்டாபட்டி வனத்துறை வனவர் முனீஸ்வரன் பசுமை உரை நிகழ்த்தினார். மரக்கன்றுகள் நடப்பட்டன. நீர் ஊற்றப்பட்டது. 'மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம், இயற்கையைக் காப்போம்' என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது. விழாவில் யானைமலை கிரீன் பவுண்டேஷன் ஆலோசகர்கள், உறுப்பினர்கள் பாஸ்கரன், ரமேஷ், மீனாட்சி தட்டச்சு உரிமையாளர் ஜெயபாலன், சங்கர் மகாதேவன், ஸ்டெல்லா மேரி, அர்ச்சனா, ஷாமினி, அட்சயராஜா, சரண், ரூபன், நலினா, பிரசீத் மற்றும் அழகப்பன் நகர் சங்க பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் கைகளால் மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்வில் பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு களப்பணி செய்தனர். மாணவி வெண்பா நன்றி கூறினார்.