முதல்வர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ்: அப்போலோ மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்
சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை மாலை வீடு திரும்பினார். 3 நாட்களுக்குப் பிறகு முதல்வர் வழக்கமான பணிகளை தொடரலாம் என அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.;
இது குறித்து அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அப்போலோ மருத்துவமனையில் (கிரீம்ஸ் சாலை) மருத்துவர் செங்குட்டுவேலு தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழு அளித்த சிகிச்சை முடிந்து முழுமையாக குணமடைந்த முதல்வர் ஞாயிற்றுக்கிழமை மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். முதல்வர் ஸ்டாலின் நலமாக இருக்கிறார். 3 நாட்கள் இடைவெளிக்குப் பின் வழக்கமான பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் 7 நாட்களுக்கு பிறகு வீடு திரும்பினார். மருத்துவமனையில் இருந்து காரில் புறப்பட்ட முதல்வரை வழிநெடுகிலும் திமுக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். வீடு திரும்பிய தமிழக முதல்வரை, நீர்வளத் துறை அமைச்சர், சட்டத்துறை அமைச்சர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சென்னை மாநகராட்சி மேயர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.