கோவை: கார் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து !
பேருந்தை முந்தி செல்ல முயன்ற கார் ஒன்று, எதிரே வந்த இருசக்கர வாகனங்களில் மோதியதில் ஏற்பட்ட விபத்தால் பரபரப்பு.;
கோவையில் அதிவேகமாக பேருந்தை முந்தி செல்ல முயன்ற கார் ஒன்று, எதிரே வந்த இருசக்கர வாகனங்களில் மோதியதில் ஏற்பட்ட விபத்து சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.vஇந்த சம்பவம் கோவை சிறுவாணி சாலையில் உள்ள ஆலாந்துறை பகுதியில் நேற்று இரவு நடைபெற்றது. ஒரு கார், முன்னே சென்ற பேருந்தை ஓவர்டேக் செய்யும் நோக்கத்தில் அதிவேகமாக இயக்கப்பட்டது. அந்த நேரத்தில், எதிர்திசையில் இருந்து வந்த மூன்று இருசக்கர வாகனங்களை கவனிக்காமல் தாண்டியதால், கார் நேருக்கு நேர் மோதல் ஏற்படுத்தியது. விபத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் தூக்கி எறியப்பட்டனர். இதில் இரண்டு இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் ஒரு நபருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இந்தக் காட்சிகளில், பேருந்தை முந்தி செல்லும் காரின் அவசர ஓட்டம், எதிரே வந்த இருசக்கர வாகனங்களுடன் ஏற்பட்ட மோதல் மற்றும் அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த பரபரப்பான தருணங்கள் தெளிவாக காணப்படுகின்றன. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேகமாக வாகனங்களை ஓட்டுவோர் பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என்ற அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.