தர்மபுரியில் ரெயிலில் வந்த ஐ.டி.ஊழியரிடம் சங்கிலி பறிப்பு

3 வாலிபர்களை சேலம் ரெயில்வே போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.;

Update: 2025-07-31 03:32 GMT
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கடலூருக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் சேலம் வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் ஐ.டி.நிறுவன ஊழியரான விஜயகுமார் (வயது 41) என்பவர் தனது சொந்த ஊரான திருவாரூருக்கு சென்று கொண்டிருந்தார். இந்த ரெயில் நேற்று முன்தினம் நள்ளிரவு தர்மபுரி ரெயில் நிலையத்தில் நின்று இருந்தது. அப்போது ரெயிலில் இருந்து இறங்கிய 3 வாலிபர்கள் விஜயகுமார் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார்கள். இதை பார்த்த ரெயில்வே போலீசார் 3 பேரையும் துரத்தினார்கள். அப்போது தர்மபுரி ரெயில் நிலையத்தில் இருந்து மீண்டும் கிளம்பிய அந்த ரெயிலில் வேறு ஒரு பெட்டியில் 3 பேரும் ஏறி தப்பினார்கள். இது குறித்து சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சேலம் ரெயில் நிலையத்தில் இறங்கிய 3 வாலிபர்களும் போலீசாரை பார்த்ததும் ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்த பேரரசு (20), கனிஷ் (20), பரத் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் தர்மபுரி ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Similar News