சேலம் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பலலட்சம் இழந்த வாலிபர் தற்கொலை
போலீசார் விசாரணை;
சேலம் அருகே சித்தனூர் காத்தவராயன் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 35). இவர் இளம்பிள்ளையில் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவருடைய மனைவி பிரியா. இவர்களுக்கு நிஷாந்த், கனிஷ்க் என்ற 2 மகன்கள் உள்ளனர். நேற்று காலை வீட்டை விட்டு வெளியே சென்ற சதீஷ்குமாரின் செல்போன் எண்ணுக்கு பிரியா தொடர்பு கொண்டார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகப்பட்ட அவர், தளவாய்பட்டி மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள கணவரின் சொந்த வீட்டுக்கு வந்தார். அங்குள்ள ஒரு அறையில் சதீஷ்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரியா அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்களின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார். அவரை மீட்டு கொல்லப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனையில் சதீஷ்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் இரும்பாலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சதீஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஏராளமானவர்களிடம் அவர் கடன் வாங்கியும் உள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழப்பு, வாங்கிய கடனை கொடுக்க முடியாத வேதனை அடைந்தார். கடும் மன உளைச்சலுக்கு ஆளான சதீஷ்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இருந்தாலும் அவருடைய தற்கொலைக்கு வேறு காரணம் ஏதேனும் உள்ளதா? என போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.