கோவையில் சட்டமன்ற பொது கணக்குகள் குழு ஆய்வு !
கோவையில் சட்டமன்ற பொது கணக்குகள் குழு ஆய்வு : மாவட்ட நிர்வாகத்துக்கு பாராட்டு - குறைகள் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல்;
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தாவரவியல் பூங்காவில், தமிழ்நாடு சட்டமன்ற பொது கணக்குகள் குழு தலைவர் செல்வ பெருந்தகை தலைமையில் அப்துல் சமது, கே.ஆர். ஜெயராம், அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, எஸ். சேகர் உள்ளிட்ட உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்டனர். செடி கொடிகள் மற்றும் தாவரவியல் துறையில் நடைபெறும் ஆய்வுகள் குறித்து அதிகாரிகள், பேராசிரியர்களிடம் குழுவினர் கேட்டறிந்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செல்வ பெருந்தகை, கோவை மாவட்டம் புற்றுநோய் பரிசோதனையில் முதலிடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சியருக்கும் நிர்வாகத்தினருக்கும் பாராட்டுகள் தெரிவித்தார். மேலும், 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகள் பழுதடைந்திருந்தால் அவற்றை புதிதாக கட்டித் தரும் சிறப்பு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், திட்டங்கள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். ஆய்வின்போது குறைகள் நீக்கப்பட வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் குற்றச்சாட்டுகள் இல்லாத நிலை ஏற்பட மாவட்ட நிர்வாகம் செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.