மஞ்சள்நீர் கால்வாய் கட்டுமானப் பணி மண் சரிவால் வாகன ஓட்டிகள் அச்சம்
, மஞ்சள்நீர் கால்வாயயோரம் உள்ள சாலையை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்;
காஞ்சிபுரம் நகரில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில், மஞ்சள்நீர் கால்வாய், கைலாசநாதர் கோவில் அருகே உள்ள, புத்தேரி பகுதியில் துவங்கி, கிருஷ்ணன் தெரு, பல்லவர்மேடு, காமராஜர் வீதி, ரயில்வே சாலை, ஆனந்தாபேட்டை, திருக்காலிமேடு வழியாக நத்தப்பேட்டை ஏரியில் இணைகிறது. இக்கால்வாயின் இருபுறமும், 40 கோடி ரூபாய் செலவில், புதிதாக பக்கவாட்டு சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில், ஒரு பகுதியாக உப்புகுளம் சொக்கம்மாள் நகர் சாலையோரம் மஞ்சள் நீர் கால்வாய் தடுப்புச்சுவர் கட்டுமானப் பணி முடிந்து உள்ளது. இந்த பகுதியில், சாலைக்கும், கால்வாய் சுவருக்கும் இடையே உள்ள பள்ளத்தில் மண் கொட்டி முறையாக சீரமைக்கவில்லை. இதனால், மழை பெய்யும்போதெல்லாம், மண் சரிவு ஏற்பட்டு, சாலையின் அகலம் நாளுக்குநாள் குறைந்து வருவதால், கால்வாய்யோரம் செல்லும்போது பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், உப்புகுளம், சொக்கம்மாள் நகர், மஞ்சள்நீர் கால்வாயயோரம் உள்ள சாலையை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.