ஓட்டுநர் உரிமத்தை மீண்டும் வழங்க கோரி டிடிஎஃப் வாசன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

ஆபத்து விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டியதாக கூறி ரத்து செய்யப்பட்ட வாகன ஓட்டுநர் உரிமத்தை மீண்டும் வழங்கக் கோரி டிடிஎஃப் வாசன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.;

Update: 2025-08-12 14:36 GMT
அதிவேகமாக வாகனங்களை ஓட்டி, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுவதாக கூறி டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கடந்த 2023-ம் அக்டோபர் மாதம் உத்தரவிட்டார். மேலும், இந்த உத்தரவு 2033-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை அமலில் இருக்கும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி டிடிஎஃப் வாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி என்.மாலா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டு ஆறு மாதங்கள் கடந்தாலே புதிய லைசென்ஸ் வழங்கக் கோரி நீதிமன்றத்தை நாடலாம் என்ற நிலையில் தனது லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டு சுமார் மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டதாக கூறினார். எனவே, புதிய லைசென்ஸ் வழங்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்தார். ஆறு மாதங்கள் கடந்து விட்டால் லைசென்ஸ் கோரி நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் என்றில்லை, உரிய அதிகாரிகளை அணுகலாம் எனக் கூறிய நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Similar News