கல்லூரி மாணவருக்கு கல்வி தொடர உதவி செய்த ஆட்சியர்
12 ஆம் வகுப்பில் 70 சதவீத மதிப்பெண் பெற்று குடும்ப வறுமை காரணமாக மேற்படிப்பை தொடர முடியாமல் இருந்த மாணவனுக்கு தான் விரும்பிய பாடப்பிரிவில் கட்டணமின்றி சேர்ந்து பயில்வதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ், வழங்கினார்.;
பெரம்பலூர் மாவட்டம் 12 ஆம் வகுப்பில் 70 சதவீத மதிப்பெண் பெற்று குடும்ப வறுமை காரணமாக மேற்படிப்பை தொடர முடியாமல் இருந்த மாணவனுக்கு தான் விரும்பிய பாடப்பிரிவில் கட்டணமின்றி சேர்ந்து பயில்வதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ், வழங்கினார். பெரம்பலூர் மாவட்டத்தின் ஆட்சித்தலைவராக ச.அருண்ராஜ் 27.06.2025 அன்று பொறுப்பேற்றது முதல் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகின்றார். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், உங்களுடன் ஸ்டாலின் போன்ற சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் வழங்கும் மனுக்களின் மீது அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தியுள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் , மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அவ்வப்போது ஆய்வும் செய்து வருகின்றார். குறிப்பாக மாணவ மாணவிகளின் உயர் கல்விக்காக உதவிகேட்டு வரும் எந்த ஒரு மாணவருக்கும் அவரின் தேவை அறிந்து தன் விருப்ப நிதியில் இருந்தும், சொந்த நிதியில் இருந்தும் பல்வேறு உதவிகளை மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ், தொடர்ந்து செய்து வருகின்றார். அதன்படி, 11.08.2025 அன்று அரணாரை கிராமம், அறிஞர் அண்ணா தெருவைச் சேர்ந்த அக்சயக்குமார் என்ற மாணவனின் தந்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் அளித்த மனுவில், தனக்கு இரண்டு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருவதாகவும், தனது மனைவி சில வருடங்களுக்கு முன் விபத்துக்குள்ளாகி விட்டில் படுத்த படுக்கையாக இருப்பதாகவும் தெரிவித்திருந்த அவர், தனது மகனை பன்னிரெண்டாம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து விட்டதாகவும், 70 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சிபெற்ற தனது மகன் இளங்கலை நுண்ணுயிரியல் (Microbiology) படிக்க விரும்புவதால், கல்லூரியில் சேர்க்க உதவிடும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார். அவரின் மனுவை கனிவுடன் பரிசீலித்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், ஒரு வாரத்திற்குள் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழத்தில் இளங்கலை நுண்ணுயிரியல் (Microbiology) பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் மாணவன் அக்சயக் குமார் அவர்கள் விரும்பிய பாடப்பிரிவில் பயில்வதற்கு ஏற்பாடு செய்திட கேட்டுக் கொண்டார். அதன்படி, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் அம்மாணவனுக்கு கல்லூரி படிப்பு முடியும் வரை எந்தவித கட்டணமுமின்றி பயில்வதற்கான கல்லூரி சேர்க்கை ஆணையினை இன்று வழங்கினார். பயனடைந்த மாணவனும், அவரது தந்தையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வைத்தியநாதன், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கல்லூரி முதல்வர்கள் முனைவர்.வெற்றிவேலன், செளத்ரி, செல்லப்பன், நாகராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.