அரசு மருத்துவமனையை திடீர் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், அடிப்படை வசதிகள் தொடர்பாகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
பெரம்பலூர் மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், அடிப்படை வசதிகள் தொடர்பாகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் இன்று (19.08.2025) திடீர் ஆய்வு மேற்கொண்டார். பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள் நோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விபத்து மற்றும் அவசர மருத்துவ முன்னெடுப்பு மையத்தினை பார்வையிட்டபோது, அங்கு விபத்துக்குள்ளான சிலருக்கு அவசர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார். மேலும், மருத்துவமனையில் உட்புற நோயாளியாக அனுமதிக்கப்படுபவர்களுக்கு போதிய படுக்கை வசதிகள் உள்ளதா என்றும், வெளிப்புற நோயாளிகள் அமருவதற்கு போதிய இருக்கைகள் உள்ளதா என்றும் பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், அங்கிருந்த நோயாளிகளிடம் மருத்துவமனையில் வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை முறைகள் திருப்திகரமாக உள்ளதா என்று கேட்டறிந்தார். பின்னர், மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தேவையான குடிநீர், கழிவறை, படுக்கைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமானதாக உள்ளதா என்பதை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், தற்போது வழங்கப்படுவதைக் காட்டிலும் கூடுதலான நீரினை நகராட்சி வழங்கினால் உதவியாக இருக்கும் என இணை இயக்குநர் வைத்த கோரிக்கையினை ஏற்று, நாளைமுதல் வழக்கமாக வழங்கும் நீரை விட கூடுதலாக, மருத்துவமனைக்கு தேவையின் அடிப்படையில் வழங்கிட வேண்டும் என நகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பொதுமக்களுக்கு வழங்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களில் குடிநீர் வருகிறதா என்பது குறித்து குடிநீர் குழாய்களை திறந்து பார்த்து ஆய்வு செய்தார். தொடர்ந்து, முதலமைச்சரின் மருத்துவக்காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சைபெறுவோர், மகப்பேறு பிரிவு, சிசு தீவிர சிகிச்சை பிரிவு, மாவட்ட மனநல ஆலோசனை பிரிவு, காது, மூக்கு தொண்டை பிரிவு, இரத்த சுத்திகரிப்பு பிரிவு, யோகா மற்றும் இயற்கை சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை முறைகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மகப்பேறு திட்டத்தின் மூலம் வழங்கப்படும் அனைத்து நலத்திட்டங்களும் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கிடவும், குழந்தை ஆரோக்கியமாக பிறப்பதற்கு தாய்க்கு தேவையான பேறுகால ஊட்டச்சத்து உணவு, மருத்துவம் மருந்து பொருட்களை வழங்கிடவும், இரத்த சுத்திகரிப்பு செய்திட வரும் நபர்களுக்கு தரமான சிகிச்சை வழங்கிடவும், தொடர்புடைய மருத்துவர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். மேலும், மருத்துவமனை வளாகத்தை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மரு.கொ.மாரிமுத்து, மருத்துவமனையின் இருக்கை மருத்துவர் மரு.என்.ராஜா, மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.பி.கலா, மற்றும் செவிலியர் கண்காணிப்பாளர்கள், பெரம்பலூர் வட்டாட்சியர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.