பெற்றோரை இழந்த நிலையில் பள்ளி செல்லாமல் இடைநின்ற மாணவர்களை அருகே அமரவைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் அறிவுரை

ஆதரவற்ற மாணவர்களுக்கு உதவும் வகையில் மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்கிடும் திட்டமான ”அன்புக்கரங்கள்” திட்டத்தின் மூலம் இந்த இருவருக்கும் மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்கிடவேண்டும்;

Update: 2025-08-20 01:28 GMT
பெரம்பலூர் மாவட்டம் எந்தக் காரணத்திற்காகவும் படிப்பதை நிறுத்திவிடக்கூடாது – பெற்றோரை இழந்த நிலையில் பள்ளி செல்லாமல் இடைநின்ற மாணவர்களை அருகே அமரவைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் அறிவுரை பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்திற்குட்பட்ட பென்னக்கோணம் ஊராட்சியைச் சேர்ந்த மாணவர்கள் குடும்ப சூழலால் பள்ளி செல்லாமல் இடைநின்றது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவருக்கு தகவல் வரப்பெற்றதை அடுத்து, அந்த மாணவர்களை நேரில் அழைத்து வரச்சொல்லி அருகே அமரவைத்து பள்ளி செல்லாததிற்கான காரணத்தை கேட்டறிந்து, அவர்களை உடனியாக பள்ளியில் சேர்த்து அதற்கான ஆணையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இலப்பைக்குடிகாடு அரசு மேல்நிலைப்பள்ளியில், பென்னக்கோணம் ஊராட்சியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு பயிலும் மாணவன் மணிகண்டன் மற்றும் அவரது சகோதரரான ஏழாம் வகுப்பு பயிலும் செல்வமணி ஆகியோர், சில வாரங்களாக பள்ளிக்கு வரவில்லை எனவும், அவர்களுக்கு ஆதார் அட்டை இல்லாததால் பள்ளியில் சேர இயலவில்லை எனவும் தகவல் வரப்பெற்ற நிலையில், உடனடியாக இந்த மாணவர்கள் குறித்து விசாரிக்க முதன்மைக்கல்வி அலுவலருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவிட்டார். இந்நிலையில், மாணவர்களின் தந்தை பத்தாண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டதாகவும், தாய் உடல்நலக்குறைவால் 6 மாதங்களுக்கு முன்பு இறந்துவிடவே, இருவரும் அவர்களது பாட்டியுடன் வசித்து வந்துள்ளனர். வயதான பாட்டியால் இவர்களை கவனித்துக்கொள்ள இயலாத நிலையில், முறையாக வழிகாட்டவும் ஆள் இல்லாமல் சில வாரங்களாக பள்ளி செல்லாமல் இருந்துள்ளனர் என்ற தகவல் தெரியவந்தது. அந்த இரண்டு மாணவர்களையும் மாவட்ட ஆட்சியர் அலுவலத்திற்கு அழைத்துவரச்சொன்ன ஆட்சித்தலைவர் அவர்கள், தனது அருகே அவர்களை அமரவைத்து, ” படிப்பு மட்டுமே நமக்கான சொத்து. எந்த காரணத்திற்காகவும் படிப்பதை நிறுத்திவிடக்கூடாது. உங்களுக்கு தேவையான உதவிகளை நான் செய்கின்றேன். மாதம் ரூ.2000 பெறும் வகையில் அரசின் உதவித்தொகை உங்களுக்கு கிடைக்க உத்தரவிட்டுள்ளேன். முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், மதியம் சத்துணவுத்திட்டம், படிப்பதற்கு தேவையான புத்தகங்கள், புத்தகப்பை உள்ளிட்ட அனைத்தும் அரசால் கொடுக்கப்படுகின்றது. நீங்கள் நன்றாக படித்தால் மட்டும் போதும்” என அறிவுரை வழங்கினார். மேலும், ஆதரவற்ற மாணவர்களுக்கு உதவும் வகையில் மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்கிடும் திட்டமான ”அன்புக்கரங்கள்” திட்டத்தின் மூலம் இந்த இருவருக்கும் மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்கிட உத்தரவிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், இவர்களைப்போன்று பெற்றோரை இழந்த நிலையில் பள்ளி செல்லும் குழந்தைகள், குடும்ப சூழலால் பள்ளிசெல்லாமல் இருக்கும் மாணவ மாணவிகள் குறித்த தரவுகளை 24 மணி நேரத்திற்குள் வழங்கிட வேண்டும் என்றும், அவர்கள் படிப்பதற்கு எந்த வகையிலான உதவி தேவைப்படுகின்றது என்பது குறித்தும் தகவல்களை சேகரிக்குமாறு முதன்மைக்கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டார். உதவி தேவைப்படும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் தவறாமல் பள்ளிக்கு சென்று முறையாக கல்வி கற்பதை உறுதி செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முதன்மைக் கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வின்போது முதன்மைக்கல்வி அலுவலர் (பொ) ம.செல்வகுமார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(கல்வி) த.குமார் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

Similar News