ராமநாதபுரம் அரசு அகழ்வாராய்ச்சி நடத்தபொதுமக்கள் கோரிக்கை
கமுதி அருகே கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்ததை போல பழங்கால பொருட்கள் மற்றும் வடிகால் அமைப்புகள் காணப்படுவதால் தமிழக அரசு இப்பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள ஆனையூர், செங்கமேடு, பேரையூர், மருதங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கீழடியில் கிடைக்கப்பெற்ற பழங்கால குடுவைகள், பானை ஓடுகள், செங்கல் மற்றும் கட்டுமான அமைப்புகள் போல கிடைத்துள்ளன. இதனால் இப்பகுதியில் தமிழ்நாடு அரசு அகழ்வாராய்ச்சி மேற்கொண்டு தமிழர்களின் பாரம்பரியத்தை பொதுமக்களுக்கும், இளைய சமூகத்தினருக்கும் தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பேரையூரைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் முனியசாமி கூறியதாவது ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பாக்குவெட்டி, குண்டாறு படுகை, ஆனையூர், மருதங்கநல்லூர், பேரையூர் உள்ளிட்ட பகுதிகளில் கீழடி அகழ்வாராட்சியில் கிடைக்கப்பெற்ற பழங்கால பொருட்களைப் போல் இப்பகுதியில் பல இடங்களில் கிடைக்கப் பெற்ற வருகிறது. சில நாட்களுக்கு முன்பு குண்டாறு படுகையில் தூர்வாரும் பணிகள் நடைபெற்ற வந்தது. அப்போது 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்து நந்தி சிலை கண்டெடுக்கப்பட்டது. இதே போல் மருதங்கநல்லூர் பகுதியில் பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த முற்காலா பாண்டியர் காலத்து சப்த கன்னியர்களில் ஒருவரான சாமுண்டி பார்வதியின் சிலை கண்டெடுக்கப்பட்டது. இதே போல் தற்போது ஆனையூர் கிராமத்தில் இருந்து பேரையூர் செல்லும் வழியில் செங்கமேடு பகுதியில் சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் தோண்டப்பட்ட பள்ளங்களில் கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப்பட்டது போன்று சீன பானை ஓடுகள், கருஞ்சிவப்பு பானை ஓடுகள், விளையாட்டு சில்லுகள், கண்ணாடி சுடுமண் மணிகள், பெரிய பானைகள், சிறு கிண்ணங்கள், பழங்கால செங்கல் கற்கள், வடிகால் அமைப்புகள் உள்ளிட்டவை கிடைத்தன. இப்பகுதிகளில் தமிழ்நாடு தொல்லியல் துறை அதிகாரிகள் தலையிட்டு அகழ்வாராய்ச்சி நடத்தினால் கீழடியில் கிடைக்கப்பெற்றது போன்று 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கை முறை, கை வண்ணங்கள் ஆகியவை தற்போதுள்ள இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்ல நல்வாய்ப்பாக அமையும். எனவே தமிழக அரசு நேரடியாக தலையிட்டு ஆணையூர், செங்கமடம், பேரையூர் உள்ளிட்ட பகுதிகளில் அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும் என்றார்.