பாலிசிகள் மீதான சேவை வரியை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் எல்.ஐ.சி. கோட்ட அலுவலக வளாகத்தில் அகில இந்திய எல்.ஐ.சி. முகவர்கள் சங்கத்தினர் (லிகாய்) புதன்கிழமை மதிய உணவு இடைவேளையின்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து முகவர்களுக்கும் மெடிக்ளைம் வசதியை உடனடியாக விரிவுபடுத்த வேண்டும். 70 வயதுக்கு மேற்பட்ட முகவர்களுக்கும் குழுக் காப்பீட்டுப் பலன்களை வழங்க வேண்டும். பாலிசிகள் மீதான சேவை (ஜி.எஸ்.டி.) வரியை நீக்க வேண்டும். அன்னிய நேரடி முதலீட்டை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும். அனைத்து கிளைகளிலும் ஒரே மாதிரியான சேவையை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் கிளைத் தலைவர் ஜி. புகழேந்தி தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஏ. ரமேஷ் தொடங்கி வைத்தார். செயலர் பி. வேளாங்கண்ணி வாழ்த்துரையாற்றினார். தஞ்சாவூர் கோட்ட தலைமை நிலையப் பொறுப்பாளர் பி. தங்கமணி சிறப்புரையாற்றினார். பொருளாளர் பி. கிருத்திகா, மூத்த முகவர்கள் வி. சிவக்குமார், எம். நடராஜமணி, ஏ. பானுமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, கிளைத் துணைத் தலைவர் வி. பத்மாவதி வரவேற்றார். நிறைவாக, துணைத் தலைவர் எம். பூபாலன் நன்றி கூறினார்.