தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்ட அலுவலகத்தில் உள்ள ஆதார் சேவை மையத்தில், வட்டாட்சியர் நா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பேராவூரணி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் உத்தரவின்படியும், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் அறிவுறுத்தலின் பேரிலும், நீண்ட காலமாக பூட்டப்பட்டிருந்த ஆதார் சேவை மையம், தற்போது கடந்த சில நாட்களுக்கு முன் திறக்கப்பட்டு மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளது. தினசரி இம்மையத்திற்கு ஏராளமான பொதுமக்கள் ஆதார் அட்டை பதிவு, புதுப்பித்தல், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், கைவிரல் ரேகை, கண் விழிப் படலம் பதிவு உள்ளிட்ட பல்வேறு ஆதார் சேவைகளுக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில், பேராவூரணி வட்டாட்சியர் நா.சுப்பிரமணியன் ஆதார் சேவை மையத்தை செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு, அங்கிருந்த பணியாளர் பார்த்திபனிடம் சேவை மைய செயல்பாடுகள், தேவைகள் குறித்து கேட்டறிந்தார். மையத்தை சுத்தமாக வைத்திருக்க அறிவுறுத்தியதோடு, அங்கு காத்திருந்த பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். ஆய்வின் போது வருவாய் ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உடன் இருந்தனர்.