போலீஸ் ஸ்டேஷன் முன்பு கழுத்தில் கத்தியை வைத்து தற்கொலை மிரட்டல்
போலீஸ் ஸ்டேஷன் முன்பு கழுத்தில் கத்தியை வைத்து தற்கொலை மிரட்டல் சாமர்த்தியமாக கத்தியை பிடுங்கிய இளைஞர்;
குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் முன்பு கழுத்தில் கத்தியை வைத்து தற்கொலை மிரட்டல் விடுத்த நபரிடம் சாமர்த்தியமாக இளைஞர் ஒருவர் கத்தியை பிடுங்கினார். குமாரபாளையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பரமேஷ். 57.விசைத்தறி தொழிலாளியான இவர் மனைவி பாலாமணி உடன் அதே பகுதியைச் சேர்ந்த சபாபதி என்பவரின் விசைத்தறி கூடத்தில் கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் பணி புரிவதற்காக விசைத்தறி உதவியாளர் சபாபதியிடம் நிதி நிறுவனம் மூலம் ஒரு லட்ச ரூபாய் கடன் பெற்றுள்ளார். இதனை கடந்த 32 மாதங்களாக மாதம் 6,500 ரூபாய் தவணைத் தொகையாக, ஒரு லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் திரும்ப செலுத்தியுள்ளார். இந்நிலையில் பரமேசின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சரிவர விசைத்தறி கூடத்திற்கு செல்ல இயலவில்லை. இதனை காரணமாக கொண்டு பரமேஷ் இன்னும் 65 ஆயிரம் ரூபாய் திரும்ப செலுத்த வேண்டும் என சபாபதி பரமேசை கேட்டுள்ளார். அதற்கு பரமேஸ் நான் ஏற்கனவே அனைத்து தொகையும் கட்டி விட்டேன் அதனால் கட்ட முடியாது என கூறியுள்ளார். இதனால் தொடர்ந்து சபாபதி மீது, பரமேஸ் கடந்த ஜூலை மாதம் 16ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில் போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டு, இனிமேல் பரமேஸ் வசம் சபாபதி பணம் கேட்கக் கூடாது, பரமேஷ் 65 ஆயிரம் ரூபாயை தவணைத் தொகையாக திரும்ப செலுத்த கால அவகாசம் கொடுத்து இருதரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சபாபதி பரமேஷ் 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டியுள்ளது எனக் கூறி வழக்கறிஞர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பரமேஷ் நேற்று மாலை 03:00 மணியளவில், திடீரென காவல் நிலையத்திற்கு வந்து, காவல் நிலையம் முன்பு நின்று போலீசார் முறையாக விசாரிக்கவில்ல என்றும், விசைத்தறி உரிமையாளர் சபாபதி தன்னை மிரட்டுவதாக கூறி கழுத்தில் கத்தி வைத்து தற்கொலை செய்து கொள்வேன் என போலீசாரை மிரட்டினார். இதனை கண்ட தலைமைக் காவலர் கண்ணன், பரமேசுடன் தொடர்ந்து பேச்சு கொடுத்துக்கொண்டே இருந்தார். அப்பொழுது அருகிலிருந்த செந்தில் என்ற இளைஞர் ஒருவர் அவரிடம் இருந்த கத்தியை பறித்து பரமேசை போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார் உடனடியாக பரமேசை மீட்டு அறிவுரை கூறி எம்.ஜி.ஆர். நகரில் உள்ள அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துவதாக பரமேசுக்கு உறுதியளித்துள்ளனர். விசைத்தறி கூலி தொழிலாளி காவல் நிலையம் முன்பு கழுத்தில் கத்தி வைத்து போலீசாரை மிரட்டிய சம்பவம் குமாரபாளையம் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது