வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்
குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்;
குமாரபாளையம் தொகுதியில் தொடர்ந்து முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் தங்கமணி வெற்றி பெற்று வருகிறார். பல வேட்பாளர்களை மாற்றியும் தி.மு.க. வெற்றி பெற முடியவில்லை. கடந்த தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் வகையில் தி.மு.க. மாபெரும் வெற்றி பெற்றாலும், குமாரபாளையம் தொகுதியில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கமணிதான் வெற்றி பெற்றார். இந்நிலையில் நேற்று குமாரபாளையம் தொகுதி, வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் குமாரபாளையத்தில் நடந்தது. ஒன்றிய பொறுப்பாளர் நாச்சிமுத்து தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் மூர்த்தி, குமாரபாளையம் தொகுதி பார்வையாளர் செல்வம், மாநில விவசாய அணி துணை செயலர் செல்வராஜ், உள்பட பலர் பேசினர். குமாரபாளையம் தொகுதி பார்வையாளர் செல்வன் பேசியதாவது: நாள் ஒன்றுக்கு 10 வீடுகள் வீதம் நேரில் சென்று, அந்தந்த பகுதி நிர்வாகிகள் பொதுமக்களை சந்தித்து, நமது கட்சியின் சாதனைகள், தற்போது நடந்து வரும் தி.மு.க. அரசின் மக்கள் நலத் திட்டங்கள், பற்றி எடுத்து கூற வேண்டும். நாம் வெற்றி பெறுவது மிகவும் எளிது. நமது கட்சி ஜெயலலிதாவை வெற்றி கண்ட கட்சி. அப்படியிருக்க, இந்த குமாரபாளையம் தொகுதியை வெல்வது கடினமா? இந்த முறை குமாரபாளையம் தொகுதியை உங்கள் உழைப்பால் தி.மு.க. கைப்பற்றுவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.