தஞ்சாவூரில் சைபர் கிரைம் காவல்துறை சார்பில், விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
விழிப்புணர்வு;
தஞ்சையில், காவல்துறை சார்பில், சைபர்கிரைம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் 700-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தில், தற்போது சைபர் கிரைம் எனப்படும் இணையவழிக் குற்றங்கள் அதிகளவில் நடைபெற்று வருகின்றது. இக்குற்றங்களால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டத்திலும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தடுக்கும் வகையில், பொதுமக்கள் சைபர் கிரைம் குற்றங்களில் ஏமாறாமல் இருப்பதற்காக தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம் உத்தரவின் பேரில், மாவட்ட தலைமையிடத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார் (சைபர் கிரைம் பிரிவு பொறுப்பு) மேற்பார்வயைில் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையம் சார்பில் விழிப்புணர்வு பிரசாரமும் துண்டுச் சீட்டுகளும் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. தஞ்சை மாவட்ட காவல் துறை மற்றும் சமூகநலனில் ஆர்வம் கொண்ட தனியார் நிறுவனத்துடன் இணைந்து சைபர் கிரைம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. போட்டியை தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இரா.இராஜாராம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 6 பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டியில், 14 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக 5 கி.மீ. தூரமும், 14 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக 3 கி.மீ. தூரமும், 12 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு 2 கி.மீ. தூரமும் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டன. இதில் 700-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டியில் முதலிடம் பிடித்தவர்களுக்கு சைக்கிளும், 2-ஆவது இடம் பிடித்தவர்களுக்கு வெள்ளிக்காசும், 3-ஆம்இடம் பிடித்தவர்களுக்கு கைக்கெடிகாரமும் பரிசாக வழங்கப்பட்டன. மேலும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், காவல் துணைக் கண்காணிப்பாளர் சோமசுந்தரம், ஆய்வாளர்கள் சந்திரா, சுதா, போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.