ராமநாதபுரம் மணல் குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
கமுதி அருகே மண்டலமாணிக்கம் குண்டாற்றில் அரசு மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆய்வுக்கு வந்த அதிகாரிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பி வைத்தனர்;
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ளது மண்டலமாணிக்கம் கிராமம். இந்த கிராமத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்ட எல்கை ஆரம்பிக்கிறது. இந்த கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள ம.பச்சேரி, காக்குடி, புத்துருத்தி, வளையபூக்குளம், எம்.புதுக்குளம், கழுவன்பொட்டல் உள்பட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களின் நீர் ஆதாரமாக விளங்கும் குண்டாற்றில் மண்டலமாணிக்கம் பகுதியில் அரசு மணல் குவாரி அமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக தகவல் அறிந்த கிராம மக்கள் கமுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த வாரம் மனு கொடுத்து தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர். இந்நிலையில் பரமக்குடி கோட்டாட்சியர் சரவண பெருமாள் தலைமையில், வட்டாட்சியர் ஸ்ரீராம், மண்டல துணை வட்டாட்சியர் வேலவன் மற்றும் வருவாய்த்துறையினர் குவாரி அமையவிருக்கும் குண்டாற்றில் ஆய்வு செய்ய சென்றனர். இதனை அறிந்த பொதுமக்கள் மண்டலமாணிக்கம் கிராமத்தின் நுழைவு வாயிலில் எம்.புதுக்குளம் விலக்கு சாலையில் அதிகாரிகளை தடுத்து நிறுத்தி குண்டாற்றில் மணல் குவாரி அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.