ராமநாதபுரம் சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது
கடலாடி அருகே ஆலங்குளம் அலியார் சாஹிப் தர்ஹாவில் சந்தனகூடு திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.;
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அடுத்துள்ள ஆலங்குளத்தில் 300 ஆண்டு பழமையான அலியார் சாஹிப் தர்ஹா உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஆவணி மாதத்தில் வரும் அமாவாசை அன்று சந்தனகூடு திருவிழா கொண்டாடுவது வழக்கம். கடந்த ஆக 21 ந்தேதி தர்ஹாவில் கொடியேற்றத்துடன் இந்த திருவிழா தொடங்கியது. சந்தன செம்பு எடுத்து வரப்பட்டு தர்ஹாவில் வைத்து 3 நாட்கள் வழிபாடு செய்யப்பட்டது. உலக நன்மைக்காகவும், மழை பெய்து விவசாயம் செழிக்கவும், சிறப்பு மவுலீது ஓதப்பட்டு, இஸ்லாமியர்களின் சிறப்பு கூட்டு பிராத்தனை நடைபெற்றது. தர்ஹாவில் புனித சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடந்தது. பிறைவடிவ பச்சை போர்வை போற்றப்பட்டு, மல்லிகை பூ சரங்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சவ்வாது, சந்தனம், அக்தர் தெளிக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இரவில் சந்தன கூடு ஊர்வலம் அதிகாலை வரை நடைபெற்றது. மேலும் இத்திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் பங்கேற்ற 15க்கும் மேற்பட்ட காளை, 100 க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்க மறுத்த காளைளை உரிமையாளர்களுக்கும், பணம், பரிசு பொருட்கள் வழங்கப்பட்டெüது. இதில் 5க்கும் மேற்பட்டோருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது. இத்திருவிழாவில் கீழக்கரை, ஏர்வாடி, ஒப்பிலான், சாயல்குடி, முதுகுளத்தூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்டபொதுமக்கள் கலந்து கொண்டனர்.