பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த கோரிக்கை
அரசு ஊழியர் சங்கம்;
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின், தஞ்சாவூர் வடக்கு வட்டப் பேரவை, தஞ்சையில் பெசன்ட் அரங்கில், சனிக்கிழமையன்று ரமணகுரு தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பொன்.ஹேமா வரவேற்புரை ஆற்றினார். இணைச் செயலாளர் மூர்த்தி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்டத் தலைவர் செந்தில்குமார் துவக்கவுரையாற்றினார். வட்டச் செயலாளர் சி.அஜய்ராஜ் வேலை அறிக்கை, பொருளாளர் பலராமன் வரவு செலவு அறிக்கை முன்வைத்தனர். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தஞ்சை கோட்டப் பொருளாளர் வெங்கடசாமி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளர் சங்க மாநில செயலாளர் பழனிச்சாமி, தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சுப் பணியாளர் சங்க மாவட்டப் பொருளாளர் ஹேமலதா, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பார்த்தசாரதி, தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சி பணி அலுவலர் சங்க மண்டல தலைவர் ஹேமா, தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்கம் மாநில துணைத்தலைவர் மதிவாணன், தமிழ்நாடு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராஜீவ்பாண்டி, தமிழ்நாடு சாலை மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் ஏ.ஆர்.கவிதா உள்ளிட்டவர்கள் வாழ்த்திப் பேசினர். மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ரெங்கசாமி நிறைவுரையாற்றினார். வட்ட இணைச் செயலாளர் கண்ணன் நன்றி கூறினார். வட்டப் பேரவையில், "தமிழக அரசின் தேர்தல் கால வாக்குறுதியின்படி, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்த வேண்டும். அரசுத் துறையில் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களை வரையறுக்கப்பட்ட ஊதியத்தின் அடிப்படையில் நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கிட ஏற்கனவே இருந்த நடைமுறையின்படி 25 சதவீதத்தை வழங்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.