பெண் சாவுக்கு நடவடிக்கை எடுக்கக் கோரி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் உறவினர்கள் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் அருகே மாதாகோட்டையைச் சேர்ந்தவர் முத்தையன் மனைவி ஆனந்தவல்லி (34). இவர் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கினார். இது குறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, ஆனந்தவல்லியின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது அண்ணன் கவியரசன் மற்றும் உறவினர்கள் தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் ஆகஸ்ட் 19 ஆம் தேதி மனு அளித்தனர். அதில், முத்தையனுக்கும் ஆனந்தவல்லிக்கும் 2017 ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்று, 6 வயதில் ஆண் குழந்தை உள்ளது. முத்தையன் சில ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டு ஓராண்டாக பிரிந்து வாழ்ந்தனர். முத்தையன் மற்றும் உறவினர்கள் சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து, இருவரும் ஓராண்டாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர். கடந்த 3 மாதங்களாக இருவருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்த நிலையில், ஆனந்தவல்லியின் சாவு குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதன் பின்னரும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனர். பின்னர், ஆட்சியரக வளாகத்தில் தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.