பேராவூரணி கே.கே.நகர் பகுதி மக்கள் சாலை வசதி கோரி வரும் சட்டசபை தேர்தலை புறக்கணிக்க முடிவு
தேர்தல் புறக்கணிப்பு;
பேராவூரணி நகரில் சாலை வசதியின்றி அவதிப்படும் பொதுமக்கள், அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சிக்குட்பட்ட 3 ஆவது வார்டு கே.கே.நகர், இங்கு 300 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரம் பொதுமக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். வட்டாட்சியர் அலுவலகம் எதிரே கே.கே.நகர் செல்லும் பாதை உள்ளது. இந்த சாலை நீண்ட காலமாக பராமரிப்பு இல்லாமல் குண்டுங்குழியுமாக உள்ளது. மேலும், சாலையின் இருபுறமும் புதர் மண்டிக் கிடக்கிறது. இந்த வழியாக இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மழைக்காலங்களில் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி இருப்பது தெரியாமல் விழுந்து அடிபடும் நிலை உள்ளது. இந்தப் பாதை ஆத்தாளூர் அருள்மிகு வீரமாகாளியம்மன் கோயிலுக்கு சொந்தமானது என அறநிலையத்துறை அலுவலர்கள் தடுப்பதால், பேரூராட்சி நிர்வாகத்தால் சாலை அமைக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், " பல வருடங்களாக. பேரூராட்சிக்கு சொத்து வரி, குடிநீர் வரி, மின்கட்டணம் செலுத்தி குடியிருந்து வருகிறோம். நகரின் மையப் பகுதியில் இருந்தும், அடிப்படைத் தேவையான சாலை வசதி மட்டும் கனவாகவே உள்ளது. பாதை இல்லாமல், புதர் மண்டி கிடப்பதால் விஷப்பாம்புகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. அவசர காலத்திற்கு கர்ப்பிணிகள், நோயாளிகள், பள்ளி, கல்லூரிக்கு மாணவ, மாணவிகள் செல்ல முடியாத நிலை உள்ளது. இறந்த சடலங்களைக் கூட எடுத்துச் செல்ல சிரமப்படுகிறோம். அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலை அமைத்து தராவிட்டால் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டு, வரும் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்" என்றனர்.