தஞ்சாவூரில் காலி மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர் ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் ஊழியர் ஆர்ப்பாட்டம்;

Update: 2025-08-26 17:29 GMT
டாஸ்மாக் ஊழியர்களுக்கு நோய்த்தொற்று மற்றும் கூடுதல் பணிச் சுமையை ஏற்படுத்தும் எச்சில் காலி மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மதுபானக் கடைகளுக்கான மின் கட்டணத்தை நிர்வாகமே ஏற்று முழுத் தொகையும் வழங்க வேண்டும். மதுபானக் கடைகளில் இறக்கப்படும் மதுபான பெட்டி ஒன்றுக்கு ரூபாய் 8 சட்டவிரோதமாக ஊழியர்களிடம் வசூல் செய்யும் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுபான கடைகளுக்கு பெட்டிகளை இறக்கும்போது திருட்டுப் போகும் பாட்டில்கள் மற்றும் உடைந்த பாட்டில்களுக்கு ட்ரான்ஸ்போர்ட் உரிமையாளரிடமிருந்து இழப்பீட்டுத் தொகையை பெற ஊழியர்களை பொறுப்பாக்கக் கூடாது. மின்னணு பணப்பரிவர்த்தனை குறைவாக உள்ள கடைகளில் சோதனை என்ற பெயர்களில் ஊழியர்களை மிரட்டக் கூடாது. சட்டவிரோதமாக மதுபான பாட்டில் மற்றும் பீர் வகைகள் விற்பனை செய்யும் மதுபான கூட உரிமையாளர்கள், தனி நபர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். கடை ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யும் நடவடிக்கையை காவல்துறை கைவிட வேண்டும்.  ஊரணிபுரம் (கடை எண் 8097), ஒரத்தநாடு (கடை எண் 8022) ஆகிய மதுபானக் கடைகளில் பணி புரியும் ஊழியர்கள் மீது காவல்துறையால் போடப்பட்ட பொய்வழக்கை ரத்து செய்ய வேண்டும்" என வலியுறுத்தி சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பில், மாவட்டத் தலைவர் கே.மதியழகன் தலைமையில்,ச தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகில் செவ்வாய்க்கிழமை காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சிஐடியு மாநிலச் செயலாளர் சி. ஜெயபால் துவக்கவுரையாற்றினார். டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் க.வீரையன், மாவட்டப் பொருளாளர் ஏ.ஜி. பன்னீர்செல்வம், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு மற்றும் டாஸ்மார்க் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News