போராடி வரும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்;
போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்திற்கு ஆதரவாக, தஞ்சாவூர் மாவட்ட மத்திய, மாநில, அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில், தஞ்சாவூர், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு திங்கட்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ந.குருசாமி தலைமை வகித்தார். ஓய்வூதியர் சங்கங்களின் மாவட்டத் தலைவர் து.கோவிந்தராஜூ துவக்கவுரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் இர.கலியமூர்த்தி நிறைவுரையாற்றினார். சிபிஎம் மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, தோழமை சங்க நிர்வாகிகள் ஆர்.தமிழ்மணி, ஆர்.புண்ணியமூர்த்தி, எஸ்.ஞானசேகரன், சந்திரோதயம், ஜி.பாலச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களும் இணைந்து கடந்த 18ஆம் தேதி முதல் இரவு பகலாக தொடர்ந்து அனைத்து மாவட்ட போக்குவரத்து கழக பணிமனைகள் முன்பாக காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு உறுதி அளித்தவாறு ஓய்வூதிய பலன்களை வழங்கிடவும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவும், கருணை அடிப்படையில் நியமனம் செய்திடவும் போராடிவரும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.