தஞ்சாவூரில் மோட்டார் சைக்கிள் மீது மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்த வணிகர் சங்க நிர்வாகி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் பி. முருகேசன் (63). அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்த இவர் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்டச் செயலராக இருந்து வந்தார். இவர் ஆகஸ்ட் 18 ஆம் தேதி பள்ளியக்ரஹாரம் முதன்மைச் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இவரது மோட்டார் சைக்கிள் மீது, பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது. இதனால், கீழே விழுந்து பலத்த காயமடைந்த இவர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இது குறித்து நகரப் போக்குவரத்து புலனாய்வு காவல் பிரிவினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.