மஞ்சப்பை திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்
மஞ்சப்பை திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் விசைத்தறியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்;
திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினமும் ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள். காடாதுணியை பல்லடம், அவினாசி, மங்கலம், சோமனூர் பகுதிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யும் மையங்களாக உள்ளன. இதற்கிடையே நூல் விலைஉயர்வு, பஞ்சு ஏற்றுமதி, ஆட்கள் பற்றாக்குறை, உற்பத்தி செய்த துணிக்கு உரிய விலை கிடைக்காதது என பல்வேறு பிரச்சினைகளால் நலிவடைந்தது. இதனால் விசைத்தறி ஜவுளி தொழிலை மேம்படுத்த தமிழக அரசு கொண்டு வந்த மஞ்சப்பை திட்டம் ஒரு சிறப்பான திட்டமாகும். இந்த திட்டத்தில் விலை மலிவான நூலைக் கொண்டு சிறு, குறு விசைத்தறியாளர்கள் மஞ்சப்பை தயாரிக்கும் காடா துணியை உற்பத்தி செய்து வந்தனர். இதன் மூலம் ஓரளவுக்கு அவர்களுக்கு வேலை கிடைத்து வந்தது. இந்த நிலையில் வட மாநிலங்களில் இருந்து பிளாஸ்டிக் நூலால் ஆன ரோட்டோ காட்டன் என்கிற பைகள் அதிகம் இறக்குமதி ஆகிறது. இதனால் மஞ்சப்பை திட்டம் முடங்கிப் போனது. எனவே தமிழக அரசு நடவடிக்கை எடுத்து புழக்கத்தில் உள்ள பிளாஸ்டிக் பைகளை அறவே அழித்து, இயற்கை பருத்தி நூலினால் ஆன மஞ்சப்பைகள் தயாரிப்பை ஊக்குவிக்க வேண்டும் என்று திருப்பூர் கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்கச் செயலாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் விசைத்தறியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்