கடல்பாசி உரத்தை மானாவாரி நிலங்களுக்கு வழங்கக் கூடாது!

கடல்பாசி உரத்தை மானாவாரி நிலங்களுக்கு வழங்கக் கூடாது: விவசாயிகள் வலியுறுத்தல்;

Update: 2025-08-28 08:19 GMT
பாசன நிலங்களில் பயன்படுத்தக்கூடிய கடல்பாசி உரத்தை மானாவாரி நிலங்களுக்கு வழங்கக்கூடாது என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் எக்டேர் மானாவாரி விவசாய நிலங்கள் உள்ளன. பாசன நிலங்களான ஆற்றுப் பாசனம், நன்செய் பாசனம், கிணற்றுப்பாசனத்தில் ஒரு வித சாகுபடி முறையும், மானாவாரி நிலங்களில் ஒரு வித சாகுபடி முறையும் செய்யப்படுகிறது. வருகிற புரட்டாசி முதல் வாரத்தில் மானாவாரி நிலங்களில் விதைப்பு செய்ய விவசாயிகள் தயாராகி வருகின்றனர். முதலில் மக்காச் சோளம் விதைக்க எந்தவொரு வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கும் முன்வரவில்லை. தற்போது அரசே நேரடியாக விதைகளை கொள்முதல் செய்து மானிய விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்கிறது. இதனால் விவசாயிகள் விரும்பிய விதைகளை வாங்க முடியவில்லை. கூடுதல் விளைச்சலும் கிடைப்பதில்லை. செப்டம்பர் முதல் வாரம் முதல் விதைப்பு பணியை தொடங்கி விடுவார்கள். அதற்கு முன்னர் வேண்டிய விதைகளை வேளாண்மை துறை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் கூறியதாவது: வேளாண் விரிவாக்க மையங்களுக்கு கடல் பாசி உரங்கள் வந்துள்ளன. 20 கிலோ கடல்பாசி களிம்பு உரம் 50 சதவீதம் மானியத்தில் ரூ.1500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த உரங்கள் ஈரத்தன்மை உடையதாகும். இவற்றை பாசன வசதி உடைய நிலங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். அதை மானாவாரி விவசாயிகளுக்கும் வழங்குகின்றனர். கடல்பாசி உரம் உலர் தன்மை இல்லாததால் பயன்படுத்த முடியவில்லை. இதுதவிர மாவட்டத்தில் எந்தவொரு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களிலும் டி.ஏ.பி உரம் இருப்பு இல்லை. டி.ஏ.பி உரம் தட்டுப்பாடு இன்றியும் முறைகேடின்றியும் விவசாயிகளுக்கு கிடைக்கவும், கடல் பாசி உரத்துக்கு பதிலாக உலர் உரம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எவ்வித அடமானமின்றி ஒரு வருடத்துக்கு வட்டியில்லா கடன் ரூ.3 லட்சம் வரை வழங்கும் திட்டத்தை இந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Similar News