விநாயகர் சதுர்த்தி : கோவையில் கோயில்கள் மற்றும் சாலையோர சிலைகளில் சிறப்பு பூஜை – பக்தர்கள் திரளான தரிசனம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையில் உள்ள அனைத்து விநாயகர் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றன.;
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையில் உள்ள அனைத்து விநாயகர் கோயில்களிலும் நேற்று (வியாழக்கிழமை) சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றன. பிரசித்தி பெற்ற புலியகுளம் ஸ்ரீ முந்தி விநாயகர் கோயிலில் 19 அடி 10 அங்குல உயரமுடைய ஆசியாவின் மிகப்பெரிய ஒரே கல்லால் ஆன விநாயகர் சிலைக்கு காலை முதலே சிவாச்சாரியார்கள் யாகவேள்வி, 16 வகை அபிஷேகங்கள் மற்றும் 4 டன் மலர்களால் ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. கொழுக்கட்டை உள்ளிட்ட இனிப்புப் பலகாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. அதேபோல் ஈச்சனாரி விநாயகர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். காவல்துறையினர் தரிசனத்திற்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். மேலும், கோவையின் பல்வேறு விநாயகர் கோயில்களிலும், இந்து அமைப்புகள் சார்பில் சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.