தஞ்சை கீழவாசல் ஆடக்காரத் தெருவை சேர்ந்தவர் சவரிமுத்து (50). தனியார் எரிவாயு உருளை விநியோக நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 26 ஆம் தேதி இவர் தஞ்சை நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு எரிவாயு உருளை விநியோகம் செய்து வந்தார். அப்போது கீழவாசல் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில், அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் விறகுகள் சேகரித்து கொண்டு இருப்பதை சவரிமுத்து பார்த்துள்ளார். தொடர்ந்து அந்த சிறுவன் அருகில் சென்று அவனைத் தாக்கி, வாயைப்பொத்தி, புதர் பகுதிக்கு இழுத்துச் சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இருப்பினும் அந்த சிறுவன் சவரிமுத்து பிடியிலிருந்து தப்பி ஓடிவிட்டான். இதையடுத்து சிறுவன் தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் இதுகுறித்து தஞ்சை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து தஞ்சை அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை நடத்தி, வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சவரிமுத்துவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.