மக்கள் நீதிமன்றம் மூலம் மாணவனிடம் ஒப்படைப்பு
தூத்துக்குடியில், கல்வி நிறுவனம் தர மறுத்த கல்வி சான்றிதழ்கள் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் மூலம் மாணவனிடம் ஒப்படைக்கப்பட்டது. ;
தூத்துக்குடி மாவட்டம் பக்கப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையா. இவருடைய மகன் ஸ்ரீகாந்த். இவர் தூத்துக்குடி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் கடந்த 14.7.2025 அன்று ஒரு மனு கொடுத்தார். அதில், ஸ்ரீவில்லிபுத்தூரில் இயங்கி வரும் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் உள்ள எனது கல்விச் சான்றிதழ்களான 10, 11, 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், டி.சி, நன்னடத்தை சான்று ஆகிய 5 சான்றிதழ்களை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இந்த மனு மீதான விசாரணை மாவட்ட முதன்மை நீதிபதியும், நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவருமான ஆர்.வசந்தி தலைமையில் நடந்தது. அப்போது இருதரப்பினரும் ஆஜர் ஆனார்கள். விசாரணையில் தீர்வு காணப்பட்டு, கல்வி நிறுவனம் மாணவனின் கல்வி சான்றிதழ்களை ஒப்படைத்தனர். அதைத் தொடர்ந்து நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் முன்பு, மாணவனிடம் சான்றிதழ்கள் ஒப்படைக்கப்பட்டன. இதன் மூலம் மாணவன் ஸ்ரீகாந்தின் மனு முடித்து வைக்கப்பட்டது. மேலும் இது போன்ற கல்வி சம்பந்தமான பிரச்சினைகள், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனு கொடுத்து எந்தவித கட்டணமும் இல்லாமல் தீர்வு காணலாம் என்று மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.வசந்தி தெரிவித்து உள்ளார்.