பேராவூரணி அருகே வாலிபருக்கு கத்திக்குத்து, ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதி
கிரைம்;
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள கொன்றைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன் மகன் சபரி முருகன் ( 20). திருச்சிற்றம்பலத்தில் கேபிள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். வாரத்தில் ஒரு முறை ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு ஊரில் நடைபெற்ற உறவினர் வீட்டு விருந்துக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இரவு 10 மணியளவில் அவரது அம்மாவிற்கு போன் செய்தவர், என்னை சிலர் கத்தியால் குத்தி விட்டு ஓடிவிட்டனர். காலகம் ரயில்வே கிராஸிங் அருகே கிடக்கிறேன் காப்பாற்றுங்கள் என கதறி அழுதுள்ளார். பதறியபடி சென்ற உறவினர்கள் சபரிமுருகனை பார்த்தபோது கழுத்து, முதுகு, இடுப்பு பகுதி, உள்ளங்கை பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்ட உறவினர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம், பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் உதவி சிகிச்சைக்கு பிறகு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் சபரிமுருகன் சிகிச்சை பெற்று வருகிறார் . இது குறித்து பேராவூரணி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.