தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பகுதியில், நோய்த்தொற்றை ஏற்படும் வகையில், குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேராவூரணி பேரூராட்சி பகுதியில் 18 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் வெறிநாய்த் தொல்லை அதிகம் உள்ளது. அதேபோல் பன்றிகளின் நடமாட்டமும் அதிக அளவில் காணப்படுகிறது. குறிப்பாக செங்கொல்லை பகுதி, ரயில்வே நிலையம், முடப்புளிக்காடு ஆகிய பகுதிகளில் பன்றிகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. சிலர் பன்றிகளை இறைச்சிக்காக வளர்த்து விற்பனை செய்கின்றனர். இந்த பன்றிகள் தெருவில் கட்டுப்பாடின்றி மந்தைகளாக சுற்றித் திரிகின்றன. மேலும், ஆனந்தவல்லி வாய்க்கால் பகுதி சாக்கடைகளில் படுத்து புரண்டு அத்துடன் வீடுகளுக்குள் புகுந்து பாத்திரங்களை உருட்டுகின்றன. குடியிருப்பு பகுதிகளில் பன்றிகள் நுழைவதால் பொதுமக்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. நகரில் உள்ள திருமண மண்டபங்களில் சேகரிக்கப்படும், எச்சில் வாழையிலைக் கழிவுகள் அப்பகுதியில் உள்ள சில இடங்களில் கொட்டப்படுவதும் பன்றிகள் நடமாட்டத்திற்கு காரணமாக உள்ளது. எனவே, செங்கொல்லை உள்ளிட்ட பேராவூரணி நகர் பகுதியில் சுற்றித் திரியும் பன்றிகளை அப்புறப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என செங்கொல்லை பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சோமசுந்தரம் கேட்டுக் கொண்டுள்ளார்.