தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே சேதுபாவாசத்திரம் கடைவீதியில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்த கடைகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கி பேராவூரணி எம்எல்ஏ நா.அசோக்குமார் ஆறுதல் கூறினார். சேதுபாவாசத்திரம் கடைவீதியில் கிழக்கு கடற்கரை சாலையில், சிவாஜி என்பவருக்கு சொந்தமான கட்டடத்தில், சே.இப்ராம்ஷா என்பவர் மளிகைக்கடையும், பெ.ராமு என்பவர் மீன் பிடித்தொழிலுக்கு தேவையான வலை, தளவாடப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையும் நடத்தி வந்தனர். அருகிலேயே கோழி இறைச்சிக்கடை ஒன்றும் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மளிகைக் கடையும், மீன்பிடி தளவாடப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையும் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது. பட்டுக்கோட்டை, பேராவூரணி, கீரமங்கலம் பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இத்தீவிபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்களும், கட்டடமும் முற்றிலும் சேதமடைந்தது. இந்நிலையில், வெளியூர் சென்றிருந்த சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், ஞாயிற்றுக்கிழமை காலை தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கடைகளை பார்வையிட்டு, கட்டட மற்றும் கடை உரிமையாளர்களுக்கு ஆறுதல் கூறியதோடு நிதியுதவி வழங்கினார். அப்போது, முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் சாகுல் ஹமீது உள்ளிட்டோர் உடனிருந்தனர்.