தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம் நரசிங்கபுரம் ஊராட்சி வள்ளி கொல்லைக்காடு பகுதியில் 3 மாதங்களாக மின்விளக்கு எரியவில்லை எனக் கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியதாவது: "பட்டுக்கோட்டை வட்டம் நரசிங்கபுரம் ஊராட்சி வள்ளி கொல்லைக்காடு பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் கடந்த மூன்று மாத காலமாக தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் மக்கள் வெளியே அச்சத்துடன் சென்று வருகின்றனர். அதேபோல் எங்களுக்கு வருகின்ற குடிநீரில் உப்பு படிந்து வருகிறது. இதனால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை உடல் நலக் குறைவு ஏற்படுகிறது. எங்கள் ஊர் பகுதியில் கொள்ளிடம் குடிநீர் குழாய் செல்கிறது. அந்த இடத்தில் பொதுவாக இரண்டு குழாய்கள் அமைத்துக் கொடுத்தால் நாங்கள் குடிப்பதற்கு இந்த தண்ணீரை பயன்படுத்திக் கொள்வோம். எனவே மாவட்ட ஆட்சியர் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.