பொதுப்பாதை ஆக்கிரமிப்பு குறித்த பேச்சு வார்த்தை:பொதுபாதையாக அறிவிக்கும் வரை கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாநில செயலாளர் காத்திருப்பு
பொதுமக்களின் பொதுப்பாதையை காவல் துறைக்கு ஒதுக்கீடு செய்தது குறித்த பேச்சு வார்த்தை : காவல்துறைக்கு ஒதுக்கிய இடத்தை பொதுபாதையாக அறிவிக்கும் வரை கோட்டாட்சியர் அலுவலகத்திலேயே காத்திருக்க போவதாக: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தொடர் காத்திருப்பு.;
அரியலூர், செப்.3 - அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களின் பொது பாதையை காவல் துறைக்கு ஒதுக்கீடு செய்தது குறித்த பேச்சு வார்த்தையில் காவல்துறைக்கு ஒதுக்கிய இடத்தை பொதுபாதையாக அறிவிக்கும் வரை கோட்டாட்சியர் அலுவலகத்திலேயே காத்திருக்க போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் காத்திருந்தார். அரியலூர் வாரச் சந்தை அருகில் செட்டி ஏரியை தென் புறம் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் இருந்த வண்டி பாதையை மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு மாவட்ட காவல்துறை குடியிருப்பு வளாகம் கட்டப்பட்ட நிலையில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை காவல் துறைக்கு வருவாய் துறையினர் ஒதுக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்கனவே வண்டி பாதையை பயன்படுத்தி வந்த மற்றும் காவல் காவலர் குடியிருப்புக்கு பின்னால் நிலம் வைத்துள்ள விவசாயிகள் மற்றும் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அந்த பொதுப்பாதையை பயன்படுத்த முடியாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொது பாதையை காவல்துறைக்கு கொடுத்ததை ரத்து செய்து மேலும் பொதுமக்கள் பயன்படுத்தும் பாதையாக மாற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பல கட்டப்போராட்டங்கள் நடத்தினர். இந்நிலையில் நேற்று புதன்கிழமை மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் பொதுப் பாதையை மீட்டு தரக் கோரி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தவும், பொதுப்பாதையை மீட்கும் முயற்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட குடியிருப்பு வாசிகள் முயன்றனர். அப்போது போலிசாரின் வேண்டுகோளையடுத்து மாநில செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் அரியலூர் கோட்டாட்சியர் கோவிந்தராஜுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்பொழுது ஏற்கனவே பொதுபாதையாக இருந்த வண்டிப்பாதையை காவல் துறைக்கு ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்து பொதுபாதையாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி பேசினார். இது யார்? செய்ய வேண்டும் மாவட்ட ஆட்சியர் செய்ய வேண்டுமா? யாரை வேண்டுமானாலும் பார்ப்பதற்கு தயாராக இருக்கிறோம் ஆனால் இன்று இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் வரை நான் அலுவலகத்திலேயே உட்கார்ந்து இருக்கிறேன் எனக் கூறி கோட்டாட்சியர் அலுவலகத்திலேயே மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் காத்திருந்தனர். போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு உறுப்பினரும் , தீக்கதிர் திருச்சி மதிப்பு பொறுப்பாளருமான ஐ.வி.நாகராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மணிவேல், எம்.வெங்கடாசலம், பி.துரைசாமி, டி.அம்பிகா, வி.பரமசிவம், ஏ. கந்தசாமி, கே.கிருஷ்ணன் துரை.அருணன், மற்றும் மூத்த தோழர் ஆர்.சிற்றம்பலம், ஒன்றிய செயலாளர்கள் அ.அருண்பாண்டியன், ஜெ.ராதாகிருஷ்ணன், கு.அர்ஜுனன், எஸ்பி.சாமிதுரை, வேல்முருகன், ஆர். தமிழ்செல்வன் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள், குடியிருப்பு வாசிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.