ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி வரி குறைப்பு வரவேற்கத்தக்கது- மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி
மதிமுக;
தஞ்சாவூரில், கட்சி நிர்வாகி இல்ல நிகழ்ச்சிக்கு வருகை தந்த மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி தொகுதி எம்பியுமான துரை வைகோ செய்தியாளர்களிடம் கூறுகையில், ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி வரி குறைப்பு வரவேற்கத்தக்கது. ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீட்டிற்கு முழு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது, அதுவும் வரவேற்கத்தக்கது, ஆனால் சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு வரி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. ஒன்றிய நிதி அமைச்சர் அதை பரிசீலனை செய்து வரியை குறைக்க வேண்டும். ஜிஎஸ்டியால் மாநிலங்களின் நிதி பற்றாக்குறை உள்ளது. இந்த வரிக்குறைப்பு நடவடிக்கையால் மாநிலங்களுக்கு கூடுதல் வரி சுமை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பாஜக அல்லாத ஆளும் மாநிலங்களில் இந்த பிரச்சனை உள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் இந்த வரி இழப்பை சரி செய்ய ஒன்றிய அரசு கூடுதல் நிதி உதவியை தமிழகத்திற்கு வழங்க வேண்டும்" என்றார். மேலும், டிடிவி தினகரன் பிஜேபி கூட்டணியிலிருந்து விலகி உள்ளார். எந்த நோக்கத்திற்காக அந்த கூட்டணியில் சேர்ந்தார், எந்த நோக்கத்திற்காக அந்த கூட்டணியிலிருந்து வெளியே வந்தார் என்பது புரியாத புதிராக உள்ளது, எங்களுடைய கூட்டணி மதவாத சக்திகள் வேரூன்ற கூடாது என்ற ஒற்றை இலக்குடன் உள்ளோம், பாஜக கூட்டணி ஒற்றுமை இல்லாத, தொலைநோக்கு சிந்தனை இல்லாத கூட்டணியாக உள்ளது. மதிமுக 2026 தேர்தலை எதிர்நோக்கி உள்ளோம், மதிமுகவில் உள்ள அவருடைய (மல்லை சத்யா) கேள்விக்கு பதில் கூறியிருக்கிறோம், மேற்கொண்டு அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, அதைப் புறந்தள்ள வேண்டும். நடிகர் விஜய் மிகப்பெரிய நட்சத்திரம், எந்த இலக்கையும் அடைய முடியும். வாய்ப்புகள் அதிகம், ஆனால் வரும் காலங்களில் அவருடைய செயல்பாடுகள் கொள்கைகளை வைத்து தான் எதையும் கூற முடியும்" என்றார்.