அமெரிக்காவின் நெருக்கடியால் ஜிஎஸ்டி குறைப்பு : பீட்டர் அல்போன்ஸ்
அரசியல்;
அமெரிக்க அதிபர் டிரம்பின் நெருக்கடியால், இந்திய பொருளாதாரம் வீழ்ந்துவிடக்கூடிய நிலையில் ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் சீரமைப்பு குழுத் தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார். தஞ்சாவூர் மாதாகோட்டை சாலை பகுதிக்கு வியாழக்கிழமை மாலை வந்த அவர் தெரிவித்தது: ஒன்றிய மோடி அரசு ஜிஎஸ்டி வரியைக் குறைத்து பெரிய இமாலய சாதனை செய்ததைப்போல விளம்பரப் படுத்தி வருவது மிகவும் அருவருக்கத்தக்கது. இந்தக் கொடுமையான ஜிஎஸ்டி வரியை இரு விகிதங்களில் அமைத்து குறைக்க வேண்டும் என 8 ஆண்டுகளுக்கு முன்பே ராகுல்காந்தி வலியுறுத்தினார். இதை செவிமடுத்து கேட்காமல் இந்த நாட்டு மக்களையும், இந்திய பொருளாதாரத்தை சிதைத்து, சின்னாபின்னமாக்கி, சிறு, குறு தொழில்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன. மேலும், மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதால், மக்களின் சேமிப்பு குறைந்து, கடன்கள் அதிகரித்துள்ளன. தற்போது, அமெரிக்க அதிபர் டிரம்பின் அதிக வரி விதிப்பால், இந்திய பொருளாதாரமே வீழ்ந்துவிடக்கூடிய சூழ்நிலையில்தான், ஜிஎஸ்டி வரி குறைப்பு முடிவை எடுத்துள்ளனர். ராகுல்காந்தி 8 ஆண்டுகளுக்கு முன்பே கூறியபோது, இந்த முடிவை எடுத்திருந்தால், இந்திய பொருளாதாரம் மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்திருக்கும். இது, நம் நாட்டு மக்களுக்கு மோடி செய்த மிகப் பெரிய துரோகம். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பதை போல இந்த முடிவை மோடி எடுத்துள்ளார்" என்றார் பீட்டர் அல்போன்ஸ். முன்னதாக, தஞ்சாவூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.ஜி.ராஜேந்திரன், வழக்குரைஞர் ராஜ்மோகன், பொதுக்குழு உறுப்பினர் வயலூர் எஸ்.ராமநாதன், நிர்வாகிகள் வடிவேல், ஜி.லட்சுமி நாராயணன், இருதயம், செல்வ சுப்பிரமணியன், சந்திரசேகரன் உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர்.