கள்ளக்குறிச்சி அடுத்த அகரகோட்டாலம் கிராம மக்களுக்கு மணிமுக்தா அணைகரை அருகே பூர்ண புஷ்களா அய்யனார் கோவில் உள்ளது. அதேபோல் அணைக்கரைகோட்டாலம் பகுதி சேர்ந்த மற்றொரு தரப்பு மக்களுக்கு வேறொரு இடத்தில் அய்யனார் கோவில் உள்ளன. இந்நிலையில், அணைக்கரைகோட்டாலத்தில் பொன்னு முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பூர்ண புஷ்களா அய்யனார் கோவிலில் நேற்று பொங்கல் வைத்து வழிபட முடிவு செய்தனர். இதற்கு அகரகோட்டாலம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், இரு தரப்பினர் இடையே பிரச்சனை ஏற்பட்டது.இதற்கிடையே கடந்த 5ம் தேதி அணைக்கரைகோட்டாலம் பொன்னு முத்துமாரியம்மன் கோவில் திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இரு தரப்பினர் இடையே பிரச்சனை ஏற்படும் சூழலால் நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., லுார்துசாமி தலைமையில் சமாதன கூட்டம் நடந்தது. இரு தரப்பு முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர். அதில் அணைக்கரைகோட்டாலம் மக்கள் கோவிலில் பொங்கல் வைக்காமல், பூஜை பொருட்கள் மட்டும் கொண்டு சென்று வழிபடலாம் என உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று பகல் 2 மணியளவில் அணைக்கரைகோட்டாலம் மக்கள் பூஜை பொருட்களுடன் மேளதாளத்துடன் கோவிலில் வழிபட புறப்பட்டு சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மேளதாளத்துடன் தான் செல்வோம் என 2.15 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர்.