ஆசிய துப்பாக்கி சுடும் போட்டி: வெள்ளகோவில் ரைஃபிள் கிளப் தங்கப் பதக்கங்கள் வென்று சாதனை - திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு 

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வெள்ளகோவில் கொங்குநாடு ரைஃபிள் கிளப் மாணவர்கள் ஆசிய துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர். திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு  தெரிவித்து பதக்கங்கள் வழங்கினார்;

Update: 2025-09-14 03:41 GMT
காங்கேயம் வெள்ளகோவில் அடுத்துள்ள லக்கமநாயக்கன்பட்டியில் கொங்குநாடு ரைஃபிள் கிளப் செயல்பட்டு வருகிறது. இங்கு துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்படுகிறது. திருப்பூரை சேர்ந்த கல்லூரி மாணவி தனிஷ்கா செந்தில்குமார் (வயது 17), கோவையை சேர்ந்த பள்ளி மாணவன் எஸ்.எம்.யுகன் (14) ஆகியோர் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் கஜகஸ்தானில் நடைபெற்ற 16-வது ஆசிய துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்றனர். இதில் 28 நாடுகளின் 800 வீரர்கள் கலந்து கொண்டனர்.  தனிஷ்கா செந்தில்குமார், எஸ்.எம்.யுகன் இருவரும் தனிப் பிரிவுகளில் தலா மூன்று தங்கப் பதக்கங்களையும், கலப்பு அணி பிரிவில் ஒரு தங்கப் பதக்கத்தையும் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தனர். இவர்களுக்கு கொங்குநாடு ரைஃபிள் கிளப்பில் பாராட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவுக்கு திருப்பூர் காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக்(IPS) தலைமை வகித்தார். காங்கேயம் காவல் உதவி கண்காணிப்பாளர் அர்பிதா ராஜ்புத்(IPS) முன்னிலை வகித்தார். சாதனை புரிந்த இருவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.  தனிஷ்கா செந்தில்குமார் 4 முறை பிரபல ஷூட்டர் (Renowned Shootet) பட்டம் பெற்றுள்ளார். அவருடைய தந்தை செந்தில்குமார் 10 முறை பிரபல ஷூட்டர் பட்டம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போல யுகன் சிறுவயதிலேயே சாதனை புரிந்ததற்கு தன்னுடைய பெற்றோர் முத்துக்குமார் - வித்யா அளித்த ஊக்கமே காரணம் என குறிப்பிட்டார். பாராட்டு விழாவில் ரைஃபிள் கிளப்பின் தலைவர், செயலாளர், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News