பல்லடம் அருகே கார் மோதி பெயிண்டர் பலி

பல்லடம் கரைப்புதூர் சாலையோரத்தில் கடைகள் முன்பு ஆகிரமித்து கலந்து விட்டால் அமைக்கப்பட்டிருந்த திட்டி மீது எதிர்பாராத விதமாக மோதிக் கீழே விழுந்த பெயிண்டர் மீது கார் ஏறி இறங்கியதால் பலியானார்;

Update: 2025-09-17 02:29 GMT
விலை மதிப்பில்லாத மனித உயிர்களை வேட்டையாடுவதில் சாலை விபத்துகளுக்கு எப்போதும் முதலிடம் தான். அதிலும் சமீப காலமாக சாலை விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சாலையில் குடிநீர் குழாய்கள், தனியார் தொலை தொடர்பு கேபிள்கள் பதிக்கவும், பாலம் கட்டவும் தோண்டப்பட்ட குழிகளை மூடாததால் அதில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து வாகன ஓட்டிகள் உயிரிழந்து வருகின்றனர். இதேபோல் சாலையோர ஆக்கிரமிப்புகளால் வாகன நெருக்கடி ஏற்படுவது மட்டுமின்றி விபத்துகளுக்கும் வித்திடுகிறது. இந்தநிலையில் பல்லடம் அருகே சாலையோரத்தை ஆக்கிரமித்து, சிலர் கான்கிரீட்டால் திட்டு போன்று அமைத்துள்ளனர். இதனால் விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:- திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கரைப்புதூரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 49). பெயிண்டர். நேற்று முன்தினம் இவர், ஸ்கூட்டரில் சின்னக்கரையில் இருந்து, அருள்புரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது கரைப்புதூர் சாலையோரத்தில் கடைகள் முன்பு ஆக்கிரமித்து, கான்கிரீட்டால் அமைக்கப்பட்டிருந்த 'திட்டு' மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் கீழே விழுந்த ரமேஷ் மீது, எதிரே மங்கலத்தில் இருந்து வந்த கார் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் ரமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். விபத்துக்கு காரணமான சிமெண்டு திட்டை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News