கோவில் அர்ச்சகருக்கு கோவில் செயல் அலுவலர் மெமோ
குமாரபாளையம் கோவில் அர்ச்சகருக்கு கோவில் செயல் அலுவலர் மெமோ கொடுத்தார்.;
குமாரபாளையம் சவுண்டம்மன் கோவில் அர்ச்சகராக இருப்பவர் ஜெகதீஸ்வரன், 38. இவர் அறநிலையத்துறை செயல் அலுவலர் குணசேகரன் வசம் சொல்லாமல் இரண்டு நாட்கள் வெளியூர் சென்றதாக கூறப்படுகிறது. இதற்கு, ஏன் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது/ என்று அர்ச்சகருக்கு மெமோ கொடுக்கப்பட்டுள்ளது. இது பற்றி ஜெகதீஸ்வரன் கூறியதாவது: எனக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். மேலும் கோவிலை தூய்மை செய்யும் பணியை எனது மனைவி செய்து வருகிறார். கோவிலில் முக்கிய விசேஷ நாட்கள், திருவிழா உள்ளிட்ட நாட்களில் என் ஒருவனால் மட்டும் அனைத்து பணிகளை செய்ய முடியாது. என் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து தான் பணி செய்வோம். அதே போல், கோவிலில் வரும் வருமானம், வீட்டு செலவு, குழந்தைகளின் கல்வி செலவு ஆகியவற்றை சமாளிக்க போதுமானதாக இருக்காது. கோவில் கும்பாபிஷேக விழா, திருமணம், வீடு கிரஹ பிரவேஷம், உள்ளிட்ட நிகழ்சிகளில் பங்கேற்று, அதனால் வரும் வருமானமும் சேர்ந்தால்தான், குடும்ப நிலையை சமாளிக்க முடியும். நான் சென்றது இரண்டு விஷேச நிகழ்ச்சிக்கு தான், இரண்டு நாட்கள் முழுதாக எங்கும் செல்லவில்லை. காலையில் சென்று விட்டு உச்சி கால பூஜைக்கு கோவிலுக்கு வந்து விட்டேன். ஈ.ஓ. இப்படி லெட்டர் கேட்கிறார். நான் இல்லாத நேரங்களில் என், மனைவி, மகள், மகன் பூஜை செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.