குமரி மாவட்டம் உண்ணாமலைகடை பகுதி சேர்ந்தவர் வினுகுமார் (39). கட்டுமான பொறியாளரான இவருக்கு செல்போன் செயலி மூலம் பென் பார்பின் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் சேர்ந்து தினந்தோறும் பேசி வந்துள்ளனர். இந்த நிலையில் வினு குமாரை நேரில் சந்திக்க வேண்டும் என பென் பார்பின் கூறியுள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்த வினு குமாரை குழிக்கோடு பகுதியில் வருமாறு கூறியுள்ளார். இதை அடுத்து வினுகுமார் அந்த பகுதிக்கு சென்றார். அங்கு பென் பார்பின் மற்றும் அவருடன் பள்ளியாடியை சேர்ந்த சாலமன் பிரபு (24) மேலும் கண்டால் தெரியும் நபர் ஆகியோர் நின்றிருந்தனர். அப்போது திடீரென்று பென் பார்பின் வினுகுமாரின் செல்போனை கேட்டார். அவர் செல்போனை தர மறுத்ததால், அங்கிருந்த சாலமன் பிரபு கம்பியால் தாக்கினார். தொடர்ந்து மூன்று பேரும் சேர்ந்து வினுகுமாரின் செல்போன் மற்றும் அவர் வைத்திருந்த பணம் ஆகியவற்றை மிரட்டி வாங்கி விட்டு, தப்பி சென்றனர். இதில் காயமடைந்த வினுகுமார் தக்கலை அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து பணம், செல் போன் ஆகியவற்றைப் பறித்துச் சென்ற மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.